என்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
ஆடியோ வெளியான விவகாரத்தின் எதிரொலியாக தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக சமீபத்தில் உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடியூரப்பா பேசிய பேச்சு அடங்கிய ஆடியோ வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள எடியூரப்பாவின் கருத்துகளை தீர்ப்பின்போது கவனத்தில் கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
இந்த ஆடியோ விவகாரத்தால் எடியூரப்பா பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார். எடியூரப்பாவின் பேச்சை பதிவு செய்து, ஆடியோவை வெளியிட்டது யார் என்பதை கண்டுபிடிக்க பா.ஜனதா உள்கட்சி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தன்னை சந்திக்க வருபவர்கள், செல்போன் கொண்டுவரக் கூடாது என்று முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் ஜே.பி.நகரில் உள்ள எடியூரப்பாவின் வீடு, அவர் குடியேற உள்ள காவேரி வீடு உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்களின் சிக்னல்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவிகளை வைக்கவும் அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். செல்போன் கொண்டு வருபவர்களை எக்காரணம் கொண்டும் தன்னை சந்திக்க அனுமதிக்கக்கூடாது என்று போலீசாருக்கு எடியூரப்பா அறிவுறுத்தி இருக்கிறார்.
முன்னதாக குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, ராய்ச்சூரில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் மகனுடன் எடியூரப்பா பேரம் நடத்தியதாக கூறப்படும் ஆடியோ உரையாடல் பதிவு வெளியாகி, பா.ஜனதாவுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.