எடியூரப்பா பேச்சு அடங்கிய ஆடியோ குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் எடியூரப்பா ஆடியோ குறித்து விசாரிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அதை தீர்ப்பின்போது கவனத்தில் எடுத்துக் கொள்வதாக உறுதியளித்தனர்.

Update: 2019-11-06 00:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு, 14 மாதங்கள் ஆட்சி செய்தது. இந்த நிலையில் அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தலைமையில் புதிதாக பா.ஜனதா அரசு அமைந்தது.

கொறடா உத்தரவை மீறியதாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார். இதில் 14 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள். 3 பேர் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் ஆவர். சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய கோரி 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் ‘ரிட்‘ மனு தாக்கல் செய்தனர்.

அந்த ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணை கடந்த மாதம்(அக்டோபர்) 25-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ வெளியானது. அதில் அவர், “ஆபரேஷன் தாமரை திட்டம், நமது கட்சியின் தேசிய தலைவரின் மேற்பார்வையில் நடைபெற்றது. அவரது உத்தரவுப்படி 17 எம்.எல்.ஏ.க்களும் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களின் தியாகத்தால் தான் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு பா.ஜனதா சார்பில் டிக்கெட் வழங்கப்படும்“ என்று பேசியிருந்தார்.

இந்த வழக்கில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் குறித்த எடியூரப்பாவின் பேச்சு அடங்கிய ஆடியோ பதிவை சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வக்கீல் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த நிலையில் எடியூரப்பாவின் ஆடியோ குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் கபில்சிபல், “பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் திட்டமிட்டு, கூட்டணி அரசை கவிழ்த்தனர். உப்பள்ளியில் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது எடியூரப்பா இதை ஒப்புக்கொண்டுள்ளார்“ என்றார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, அந்த ஆடியோவில் என்ன இடம் பெற்றுள்ளது என்று கேட்டனர். அதற்கு கபில்சிபல், அந்த ஆடியோவில் கன்னடத்தில் இடம் பெற்றுள்ள எடியூரப்பாவின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறினார். அதை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “விசாரணையின்போது, நீங்கள் இதுபற்றி எடுத்துக் கூறியிருக்கிறீர்கள். அதனால் இந்த ஆடியோ குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டிய தேவை இல்லை. விசாரணை நடத்தினால் எடியூரப்பாவுக்கு நோட்டீசு கொடுக்க வேண்டி வரும். இதனால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு வெளியாவதில் காலதாமதம் ஏற்படும். விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பை அறிவிக்க ஒத்துழைக்க வேண்டும்“ என்றனர்.

ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஆஜரான வக்கீல் ராஜீவ்தவான், கபில்சிபலின் வாதத்தை ஆதரித்தார். தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான வக்கீல் சுந்தரம், “இந்த வழக்கில் எடியூரப்பா ஒரு வாதி அல்ல. அதனால் எடியூரப்பா ஆடியோவுக்கும், இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. கட்சி கூட்டத்தில் பேசியதை ஆதாரமாக கருத முடியாது. இந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள பேச்சு, சட்டப்படி உறுதி செய்யப்படவில்லை. அதனால் ஆடியோவை ஆதாரமாக கருதக் கூடாது“ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆடியோவில் இடம் பெற்ற விஷயங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிக்கிறோம். அதனால் எடியூரப்பாவின் ஆடியோ குறித்து விசாரணை நடத்த சாத்தியமில்லை. தீர்ப்பு வழங்கும்போது, அனைத்து அம்சங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்“ என்று கூறி விசாரணையை முடித்துவைத்தனர்.

மேலும் செய்திகள்