கூடலூர் பகுதியில், பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள் - பாதுகாக்க வன ஆர்வலர்கள் வேண்டுகோள்

கூடலூர் பகுதியில் பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரங்கள் பரவலாக காணப்படுகிறது.

Update: 2019-11-05 22:45 GMT
கூடலூர்,

மேற்கு தொடர்ச்சி மலையில் 5 ஆயிரம் வகை பூக்கும் தாவரங்கள் மற்றும் பாலூட்டிகள், பல்வேறு வகையான பறவைகளும் உள்ளது. இதுதவிர அரிய வகை தாவரங்கள், சிறு வன உயிரினங்கள் உள்ளது. நீலகிரியில் 1,232 தாவரங்கள் உள்ளதாக வன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்தநிலையில் இமயமலை பகுதியில் அதிகளவு காணப்படும் டொசிரா பெல்டேட்டா என பெயர்கள் கொண்ட பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்கள் உள்ளது. இதேபோல் கடந்த சில ஆண்டுகளாக கூடலூர் வனப்பகுதியில் டொசிரா பெல்டேட்டா தாவரங்கள் காணப்படுவதாக வன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். டொசிரா தாவரத்தில் டொசிரா பர்மானி, பெல்டேட்டா, இன்டிகா என 3 பிரிவுகள் உள்ளன. இவ்வகை தாவரங்கள் கூடலூர், தேவாலா, நடுவட்டம் பகுதியில் பரவலாக காணப்படுகிறது.

டிசம்பர் முதல் மே மாதம் வரை கடும் பனிப்பொலிவு மற்றும் கோடை காலம் என்பதால் பசுமை இழந்து காணப்படும் வனப்பகுதிக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் புல்வெளிகள், அரிய வகை தாவரங்கள், சிறு வன உயிரினங்கள் தீயில் கருகி விடுகிறது. இதனால் பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்களும் குறைந்த அளவில் காணப்படுகிறது. மேலும் அழிவின் பட்டியலிலும் டாசிரா தாவரம் இடம் பிடித்துள்ளது.

இது குறித்து வன ஆர்வலர்கள் மற்றும் தாவர ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:-

நீலகிரி உயிர் சூழலில் அரிய வகை தாவரங்கள் உள்ளது. டொசிரா பர்மானி, பெல்டேட்டா, இன்டிகா தாவரங்கள் பூச்சிகளை பிடித்து உண்ணுகிறது.

கூடலூர் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு இவ்வகை தாவரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்த தாவரங்கள் கூடலூர் பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.

இதுபோன்ற தாவரங்களை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்