பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் 14 திருநங்கைகளுக்கு வீடு கட்ட பணி உத்தரவு - மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள்குறைதீர்வுநாள் கூட்டத்தில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் 14 திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.

Update: 2019-11-04 21:30 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமையில் நடந்தது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குறைதீர்வு கூட்டத்தில் இந்து முன்னணி சார்பில் கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் “நமது மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமையான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் நிலங்கள் கோவில் பராமரிப்பு, பூஜைக்காக முன்னோர்களால் வழங்கப்பட்டது.

சமீபத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்திருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும், தனியாருக்கு விற்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு அதே நிலத்தை வழங்க எடுத்துள்ள முடிவு பக்தர்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளது. ஆகவே அரசு இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

பேரணாம்பட்டு தாலுகா மேல்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், “நாங்கள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் சுடுகாடாக பயன்படுத்தி வந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சுடுகாட்டை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்று கூறி உள்ளனர்.

சத்துவாச்சாரி பகுதி 2-க்குட்பட்ட மலையடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஜெயலலிதா பேரவை மாநகர் மாவட்ட துணை செயலாளர் முரளிகுமார் தலைமையில் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், “மலையடிவாரத்தில் உள்ள நத்தம் புறம்போக்கில் சுமார் 50 ஆண்டுகளுக்கும்மேலாக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வீடுகட்டி, மின் இணைப்பு பெற்று வசித்து வருகிறோம். அந்த இடத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் ஓய்வுபெற்ற சர்வேயர்களை வைத்து மனைப்பிரிவுகள் சரிபார்க்கப்பட்டது. ஆனால் பட்டா வழங்காமல் நிலுவையில் உள்ளது. இதனை ஆய்வுசெய்து உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

கூட்டத்தில் வேலூர் சாஸ்திரி நகர் பகுதியில் திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுமனையில், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சார்பில், பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின்கீழ் 14 பேருக்கு வீடுகட்டுவதற்கான பணி உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் வழங்கினார்.

அதேபோன்று சமூகநலத்துறை சார்பில் 5 பேருக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மன வளர்ச்சி குன்றிய 2 பேரின் பெற்றோருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், 2 பேருக்கு காதொலி கருவி ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்