மயானத்தில் மணல் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
வேடசந்தூர் அருகே மயானத்தில் மணல் அள்ளிய லாரி, பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள அரியப்பித்தம்பட்டியில் குடகனாற்றின் கரையோரத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வருகின்றனர். சமீப காலமாக இந்த மயானத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை தோண்டி எடுத்து லாரி, டிராக்டரில் அள்ளி செல்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் ராட்சத பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுமட்டுமின்றி இறந்தவர்களின் எலும்புக்கூடுகளும் வெளியே தெரிகின்றன. நேற்றும் அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மர்மநபர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரியப்பித்தம்பட்டி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள், அங்கு மணல் அள்ளுவதை கண்டித்து லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு லாரி, பொக்லைன் எந்திரத்தை விடுவித்தனர்.
இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.