கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், புதிய ரக திராட்சை விளைச்சல் அமோகம்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் புதிய ரக திராட்சை அமோக விளைச்சல் அடைந்துள்ளது.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் திராட்சை ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு திராட்சை ரகங்கள் மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் கண்டறிவது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 130 புதிய திராட்சை ரகங்கள் நடப்பட்டு அவைகளின் குணாதிசயங்கள் பற்றி ஆராய்ச்சி நடைபெறுகிறது. இதில் பழரசம், உலர் திராட்சை, ஒயின் தயாரிக்க ஏற்ற ரகங்களும் அடங்கும்.
கம்பம் மற்றும் ஆனைமலையன்பட்டியில் புதிய ரகமான கிரிம்சன் என்ற விதையில்லா திராட்சை பயிரிடப்பட்டுள்ளது. அவை அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளது. கொடிகளில் கொத்துக்கொத்தாய் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. தற்போது பழங்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நல்ல மகசூல் கொடுக்கிற ரகமாக கிரிம்சன் திராட்சை விளங்குகிறது.
இதுகுறித்து திராட்சை ஆராய்ச்சி நிலைய முதன்மை பேராசிரியர்கள் சரஸ்வதி, சுப்பையா ஆகியோர் கூறியதாவது:–
புதிய ரக கிரிம்சன் விதையில்லா திராட்சை ரகம் ஒரு ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் தருகிறது. மொத்த வருமானம் ரூ. 6 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. திராட்சை கொத்துகளில் பிஞ்சுகள் நெருக்கமாக இருக்கும். அவற்றை கலைந்து 80 முதல் 100 பழங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு திராட்சை ஆராய்ச்சி நிலையத்துக்கு விவசாயிகள் நேரில் வந்து ஆலோசனைகளை பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.