பட்டாசு வெடித்த தகராறில் வாலிபர் கொலை: கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் கைது

சேலத்தில் பட்டாசு வெடித்த தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-29 23:00 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 23). இவரது நண்பர் முகமது சாபீர். இவர்கள் இருவரும் 27-ந் தேதி தீபாவளியன்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை வித்யாநகர் 8-வது கிராஸ் பகுதி வழியாக சென்றனர். அப்போது, சில இளைஞர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர்.

அதில், ஒரு பட்டாசு முகமது சாபீர் மீது விழுந்ததால் ஆத்திரம் அடைந்த அவர், அங்கிருந்த இளைஞர்களை கண்டித்தார். அப்போது, அவர்களுக்கும், முகமது சாபீருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் முகமது சாபீர், தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அங்கு வரவழைத்தார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மேலும், ஒருவருக்கு ஒருவர் இரும்பு கம்பியாலும், கல்லாலும் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த அபுபக்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயம் அடைந்த முகமது சாபீர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் மணிகண்டன் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், அபுபக்கர் கொலை தொடர்பாக பெரியகிணறு பகுதி சேர்ந்த பால்மணி என்கிற மணிகண்டன் (32), லட்சுமி நகர் 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கதிரேசன் (25), பழனிசெட்டி தெருவை சேர்ந்த அஜித், கவுதம், பாலா என்ற பாலகுமார், பிரகாஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பாலா என்கிற பாலகுமார் கல்லூரி மாணவர் ஆவார். இவர்கள் அனைவரும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்