காற்றழுத்த தாழ்வுநிலை: ராமேசுவரம், மண்டபம் பகுதியில் பலத்த மழை

காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2019-10-29 22:15 GMT
பனைக்குளம்,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் ராமேசுவரம் பகுதியிலும் நேற்று காலை முதலே மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக பெய்யத் தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் ராமேசுவரம் கோவில், பஸ் நிலையம் செல்லும் ராமதீர்த்தம், தனுஷ்கோடி செல்லும் சாலை, கோவில் ரத வீதி உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

தங்கச்சிமடத்தில் பெய்த மழையால் பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பாம்பனில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் ரோடு பாலத்தின் சாலை முழுவதும் மழை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தபடி சென்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நெற்பயிர்களில் களையெடுப்பு நிறைவடைந்து தற்போது உரமிடும் சமயத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நன்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்