திருட்டை தடுத்ததால் ஆத்திரம் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் திருட முயன்றதை பொதுமக்கள் தடுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், சாலையோரம் நிறுத்தி இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், அதன் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவொற்றியூர்,
சென்னை புதுவண்ணாரபேட்டை ஏ.இ.கோவில் தெரு தெற்கு மாடவீதியில் மர்ம நபர்கள் சிலர் தீபாவளி அன்று இரவு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருட முயன்றனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், திருடன்... திருடன்... என கூச்சலிட்டபடி அவர்களை விரட்டி அடித்தனர்.
அப்போது தப்பி ஓடிய அவர்கள், “நாளை இந்த தெருவை என்ன செய்கிறோம் பாருங்கள்” என்று கூறியபடி சென்றனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு
அதன்படி நேற்று முன் தினம் இரவு அப்பகுதிக்கு வந்த மர்மநபர்கள் 4 பேர், அங்கு சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி உடைத்தனர். மேலும், பெட்ரோல் குண்டையும் வாகனங்கள் மீது வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். ஆனால் நல்லவேளையாக பெட்ரோல் குண்டு வெடித்து வாகனங்களில் தீ பற்றவில்லை.
இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்பு என்ற சசிகுமார் (வயது 21) உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டையில் தொடரும் பெட்ரோல் திருட்டு வழிப்பறி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.