பீமன் நீர் வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த போது தவறி விழுந்த வாலிபர் பலி

பீமன் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்தபோது தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-10-29 22:45 GMT
திருவண்ணாமலை,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் முரளி (வயது 22). சின்னமோட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன் (19), விஜயகுமார் (23). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இதில் முரளி, மணிகண்டன் இருவரும் கோவையில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தனர்.

தீபாவளி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவர்கள் இருவரும் உள்ளூர் நண்பரான கட்டிட தொழிலாளி விஜயகுமாருடன் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் ஜவ்வாதுமலை பீமன் நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

அப்போது அருவியில் வேறு யாரும் இல்லை. அருவியில் தண்ணீர் கொட்டும் மேல்பகுதிக்கு சென்ற முரளியும், மணிகண்டனும் அங்கு நின்றபடி ‘செல்பி’ எடுத்தனர். அப்போது திடீரென பாறையில் இருந்த பாசி வழுக்கியதில் இருவரும் அருவிக்குள் தவறி விழுந்தனர்.

இதில் பாறை மீது மோதியதில் முரளிக்கு இடுப்பு எலும்பு, வலதுகை, கால் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. இதேபோல் மணிகண்டனும் படுகாயமடைந்தார். இதனை தூரத்தில் இருந்து பார்த்த சிலர் உடனடியாக வனத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஜமுனாமரத்தூர் போலீசார், வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவ மனையிலும் சேர்த்தனர். இதில் முரளி மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்