நளினியும் உண்ணாவிரதம்: தற்கொலைக்கு தூண்டுவதாக சிறைத்துறை மீது முருகன் புகார்
தற்கொலைக்கு தூண்டுவதாக சிறைத்துறை மீது முருகன் புகார் தெரிவித்துள்ளதாக அவரது வக்கீல் புகழேந்தி கூறினார்.
வேலூர்,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட இக்கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் தங்களது விடுதலைக்காக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் முருகன் தங்கியிருந்த அறையில் ஆன்ட்ராய்டு செல்போன், 2 சிம்கார்டுகள், ஹெட்போன் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கியது. இதையடுத்து முருகன் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கான சிறை சலுகைகள் ரத்து செய்யப்பட்டது.
இதை கண்டித்து அவர் சிறையில் கடந்த 20-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கணவருக்கு ஆதரவாக அவரது மனைவி நளினியும் ஜெயிலில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். நேற்று 3-வது நாளாகவும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர்களை சிறையில் அவர்களது வக்கீல் புகழேந்தி சந்தித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
முருகன் மீது வீண் பழி சுமத்தி தனி அறையில் அடைத்துள்ளனர். இதை கண்டித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனு நகலை நான் பெற சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அந்த மனுவில் முருகன் கூறியிருப்பதை என்னிடம் தெரிவித்தார்.
அந்த மனுவில் முருகன், என்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். குளிக்க சோப்பு தருவதில்லை. நான் அணியும் காவி உடையை பறித்துக்கொண்டு வெள்ளை உடை அணிய கூறுகின்றனர். எனது அறையில் இருந்த சாமி படங்களை அகற்றி விட்டனர். நான் தியானம் செய்ய அனுமதிப்பதில்லை. மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொலைக்கு தூண்டுகின்றனர். இவ்வாறு மனுவில் அவர் கூறி உள்ளார். அவருக்கு ஆதரவாக அவரது மனைவி நளினியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறைத்துறை மீது வைக்கப்படும் இந்த புகார் குறித்து கேட்க சிறைத்துறை டி.ஐ.ஜி. மற்றும் சூப்பிரண்டு ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. நளினி, முருகன் ஆகியோர் தொடர்பாக வரும் தகவல்களை தொடர்ந்து சிறைத்துறை தெரிவிக்க மறுப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.