கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய 4,375 கிலோ வெடி மருந்து பறிமுதல் - 3 பேர் கைது
கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய 4 ஆயிரத்து 375 கிலோ வெடிமருந்துகளை கேரள போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
கூடலூர்,
கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு தினமும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏராளமான சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் தமிழக எல்லையான கக்கநல்லா, தொரப்பள்ளி, நாடுகாணி ஆகிய பகுதியில் 3 சோதனைச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக- கேரள எல்லையான வழிக்கடவில் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பேட்டில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு சென்ற லாரியை போலீசார் நிறுத்தினர். அப்போது லாரிக்குள் 3 பேர் இருந்தனர். இதில் டிரைவரிடம் விசாரித்தனர். அப்போது காய்கறி மூட்டைகள் கொண்டு செல்வதாக அவர் கூறினார்.
இருப்பினும் சந்தேகம் அடைந்த கேரள மதுவிலக்கு போலீசார் லாரியில் ஏறி காய்கறி மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது மூட்டைகளுக்கு அடியில் வெடிமருந்துகள் பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்த 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர்கள் 3 பேரும், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஜீனதேவ் (வயது 37), திருச்சூரை சேர்ந்த சுனில்குமார் (50), பினோ (45) ஆகியோர் என்பதும், கேரளாவிற்கு 4 ஆயிரத்து 375 கிலோ ஜெலட்டின் மற்றும் ஆயிரம் டெட்டனேட்டர் வெடிமருந்துகளை கடத்தியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடி மருந்துகளை கடத்திய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்திய வெடி மருந்து மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.