வெவ்வேறு இடங்களில் விபத்து; 5 பேர் சாவு

ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-10-28 22:15 GMT
ஈரோடு,

அந்தியூர் அருகே உள்ள சிந்தாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் அய்யாவு (வயது 25). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகாதவர். அய்யாவு நேற்று முன்தினம் ஆப்பக்கூடலில் உள்ள ஒரு கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

ஆப்பக்கூடல் புதுப்பாளையம் அருகே சென்றபோது அய்யாவுவின் மோட்டார்சைக்கிளும் எதிரே வந்த மற்றொரு மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் அய்யாவு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தவர் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

படுகாயம் அடைந்த அய்யாவுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யாவு நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்றவரை தேடி வருகிறார்கள்.

இதேபோல் அம்மாபேட்டை பகுதியில் மற்றொரு விபத்து நடந்தது. அதன் விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஜலகண்டாபுரம் தாரமங்களம் குட்டிகவுண்டன் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சிவக்குமார் (23). திருமணம் ஆகாதவர். இவர் அரியானா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள நத்தமேட்டில் அந்தியூர்-அம்மாபேட்டை செல்லும் ரோட்டில் ெசன்று கொண்டிருந்தார். ஊஞ்சப்பாளையம் அருகே சென்றபோது பாலம் வேலைக்காக அங்குள்ள சாலையில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்பில் மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பவானிசாகர் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமியின் மகன் குணா(19). இவர் தனது நண்பரான பனையம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கோபால்(24) என்பவருடன் நேற்றுமுன்தினம் மாலை பெரியகள்ளிப்பட்டியில் இருந்து மல்லியம்பட்டி செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

முருகன்நகர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் குணா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த கோபாலை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெருந்துறை பவானி ரோடு, சோளிபாளையத்தை சேர்ந்தவர் தனசேகர் (45). இவர் பெருந்துறை பஸ் நிலையம் பகுதியில், மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த 26-ந்தேதி இரவு 11 மணி அளவில் மருந்துக்கடையை பூட்டிவிட்டு, தனது இரு சக்கர வாகனத்தில் சோளிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பூவம்பாளையம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சர்வீஸ் ரோட்டிற்கு அவர் வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக, தனசேகரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. விபத்து நடந்ததும் லாரி அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தனசேகர் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தனசேகரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த தனசேகருக்கு கவிதா(42) என்ற மனைவியும், மதுபிரீத்தா(13) என்ற மகளும் உள்ளனர்.

அறச்சலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவர் கடந்த 23-ந் தேதி மாலை அந்த பகுதியில் உள்ள கடைக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது ேமாதியது. இதில் கீழே விழுந்த சுப்பிரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்