பட்டப்பகலில் துணிகரம் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை

சென்னை ஜெ.ஜெ.நகரில் பட்டப்பகலில் வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-10-28 22:30 GMT
பூந்தமல்லி,

சென்னை பாடி புதுநகர் 13-வது தெருவைச் சேர்ந்தவர் அழகு என்ற அழகுமுருகன்(வயது 27). நேற்று மதியம் இவர், பாடி புதுநகர், 11-வது தெரு வழியாக நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த மர்ம கும்பல், திடீரென தங்களிடம் இருந்த அரிவாளால் அழகு முருகனை வெட்டியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மர்ம கும்பலிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் விரட்டிச்சென்ற மர்மகும்பல், ஓட ஓட விரட்டி அழகுமுருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

முன்விரோதம் காரணமா?

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஜெ.ஜெ.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறைமுருகன் தலைமையிலான போலீசார், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அழகு முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கொலையான அழகுமுருகன், ஆன்-லைன் மூலம் உணவு பொருட்களை ஆர்டர் கொடுப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கில் அழகுமுருகன் கைது செய்யப்பட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனவே முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா? அல்லது ஏரியாவில் யார் பெரிய ஆள்? என்ற மோதலில் கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

கொலை நடந்தபோது அந்த பகுதியில் செல்போனில் யாரெல்லாம் பேசினார்கள்?, கொலையான அழகுமுருகுன், கடைசியாக யாரிடம் செல்போனில் பேசினார்? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பட்டப்பகலில் வாலிபர், ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்