தீபாவளி அன்று அதிக இனிப்பு வகைகள் ருசிப்பு: சர்க்கரை அளவை பரிசோதிக்க ரத்த பரிசோதனை மையங்களில் கூட்டம்
ரத்த பரிசோதனை மையங்களில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது.
சென்னை,
நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி ரத்த பரிசோதனை செய்து, உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றனர். மற்ற நாட்களில் இனிப்பு வகைகள் தவிர்க்கும் சர்க்கரை நோயாளிகள் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் நாவை கட்டுப்படுத்த முடியாமல், இனிப்பு வகைகளை ருசி பார்க்கின்றனர்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி நாக்கின் சுவையை தூண்டும் வகையில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் ஈர்க்கப்பட்டு சர்க்கரை நோயாளிகள் பலரும் கூடுதல் இனிப்பு வகைகளை வயிற்றுக்குள் தள்ளினர்.
தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று காலை எழுந்ததுமே, இனிப்பு அதிகம் சாப்பிட்டதால் சர்க்கரை அளவு அதிகரித்திருக்குமோ? என்ற அச்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்பட்டது.
வீட்டில் ரத்த பரிசோதனை செய்துக் கொள்ளும் கருவி வைத்திருப்பவர்கள், அதில் சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொண்டனர். அந்த வசதி இல்லாதவர்கள் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ரத்த பரிசோதனை மையங்களுக்கு சென்று சர்க்கரை அளவை பரிசோதித்தனர். இதனால் ரத்த பரிசோதனை மையங்களில் வழக்கத்தை விட நேற்று கூட்டம் அதிகம் காணப்பட்டது. சர்க்கரை அளவு அதிகரித்தவர்கள் உணவு கட்டுப்பாட்டு மூலம் குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.