ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் 2-வது நாளாக அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் 2-வது நாளாக நேற்று அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடும் அவதியுற்றனர்.

Update: 2019-10-26 23:00 GMT
சேலம்,

அரசு டாக்டர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும், முதுநிலை பட்டமேற்படிப்பில் ஏற்கனவே இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர்கள் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சேலத்திலும் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடைய போராட்டம் நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. அரசு டாக்டர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் பேசினர்.

நோயாளிகள் அவதி

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

பதவி உயர்வு, காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் அரசு தலைமை ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் என மாவட்டம் முழுவதும் 400-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அவசர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவுகளில் டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் எங்களுடைய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். அதுவரை டாக்டர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் 2-வது நாளாக நோயாளிகள் கடும் அவதியுற்றனர்.

மேலும் செய்திகள்