ஏழை பெண்களுக்கு தாலிக்குதங்கத்துடன் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தால் ஜெயலலிதா பெயர் என்றும் நிலைக்கும் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு

ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்துடன், திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தினால் ஜெயலலிதாவின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

Update: 2019-10-26 22:30 GMT
சிவகங்கை,

மாவட்ட சமூகநலத் துறையின் மூலம் ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி உதவியுடன், தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். சமூகநலத் துறை அலுவலர் வசந்தா வரவேற்றார்.

விழாவில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:- ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற காலம் முதல் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வந்தார். அதிலும் விவசாயிகள் மற்றும் வறுமையிலுள்ள குடும்பங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் எடுத்து பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார்.

அதில் ஏழை பெண்களுக்கான திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அவரது கனவு திட்டமாகும் இந்ததிட்டத்தினால் இன்று வரை அவரது பெயர் நிலைத்து நிற்கிறது. பெண்கள் நன்கு படித்து வாழ்க்கையில் உயர்வடைய வேண்டும் என்பதற்காக கருவறை முதல் வாழ்நாள் வரை பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பட்டம் படித்த 1,303 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வீதமும், 10-ம் வகுப்பு படித்த 1,182 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதமும், திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கமும் சேர்த்து மொத்தம் ரூ.17 கோடியே 8 லட்சத்து 20 ஆயிரத்து 520 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சுத்துறை தலைவர் சசிக்குமார், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் பாண்டி, கோபி, மோகன், ராஜா, பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூகநலத்துறை கண்காணிப்பாளர் பாலா நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்