வவ்வால்களை பாதுகாக்க தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்கும் பொதுமக்கள்

வவ்வால்களை பாதுகாப்பதற்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.

Update: 2019-10-26 22:45 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு, நெடுவாசல் வடக்கு, மறமடக்கி ஆகிய கிராமங்களில் இயற்கையாய் அமைந்த ஆலமரக்காட்டில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. அதாவது இயற்கையாய் அமைந்த வவ்வால்களின் சரணாலயமாக உள்ளது அந்த ஆலமரங்கள். இரவில் இரை தேடிச் செல்லும் வவ்வால்கள் பகல் முழுவதும் ஆலமரக் கிளைகளில் தொங்கிக் கொண்டு சப்தமிட்டபடியே இருக்கும். சாலையோரங்களில் இந்த வவ்வால்களின் சரணாலயம் இருப்பதால் ஏராளமான பொதுமக்கள் வந்து பார்த்து செல்கின்றனர்.

பட்டாசுக்கு தடை

வவ்வால்கள் வாழும் ஆலமரக் காடுகளில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. காரணம் பட்டாசு வெடித்தால் வவ்வால்கள் இடம் பெயர்ந்து ஓடிவிடும் என்பதால் பட்டாசு வெடிப்பதை பல ஆண்டுகளாக தவிர்த்து வருகின்றனர் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள். தீபாவளிக்கு கூட பட்டாசு வெடிப்பதை ஒரு கி.மீ. சுற்றளவில் தடை செய்துள்ளனர் கிராமத்தினர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆலமரங்களில் வவ்வால்கள் வாழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கில் வவ்வால்கள் இருந்தது. யாரையும் வேட்டையாட விடமாட்டோம். அதனால் அதிகமாக இருந்தது. ஆனால் கஜா புயலில் மரங்கள் உடைந்து சாய்ந்ததால் ஏராளமான வவ்வால்கள் இறந்துவிட்டதுடன் இடம் பெயர்ந்தும் சென்றுவிட்டது.

தற்போது வவ்வால்கள் குறைந்த அளவில் உள்ளது. அதனை தொடர்ந்து பாதுகாக்கும் விதமாக தீபாவளிக்கு ஒரு கி.மீ. தொலைவு வரை பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்