மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் கடலில் கலந்து வீணாகிறது; விவசாயிகள் வேதனை

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Update: 2019-10-26 23:15 GMT
காட்டுமன்னார்கோவில்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை பரவலாக பெய்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இந்த நீர் கல்லணையை வந்தடைந்ததை அடுத்து, கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. ஆற்றில் பெருக்கெடுத்து வந்த நீர் கடலூர்-தஞ்சாவூர் மாவட்ட எல்லையாக இருக்கும் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையை வந்தடைந்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 33 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.

9 அடி கொள்ளளவு கொண்ட கீழணையில் ஏற்கனவே தண்ணீர் இருந்தது. இதனால் அதன் உச்ச மட்டத்தை உடனடியாக எட்டியது. ஆகையால் பாதுகாப்பு கருதி அணையில் 8½ அடிக்கு குறையாமல் பார்த்துக்கொண்டு, வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீரை கொள்ளிடம் ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டுள்ளனர். மேலும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2200 கனஅடி நீரும், வடக்கு ராஜன், தெற்கு ராஜன் வாய்க்கால்களில் வினாடிக்கு 600 கனஅடியும், கும்கி மணியாறு வழியாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த மாதத்தில்(செப்டம்பர்) அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கீழணையை வந்தடைந்து, அதன் வழியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வங்க கடலில் சென்று கலந்து வந்தது. இதை தொடர்ந்து அதே மாத இறுதியிலும் இதுபோன்று கீழணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இதுபோன்ற நிலையில் தற்போது 3-வது முறையாக உபரி நீர் கடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் தொடர்ந்து வீணாக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 2200 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 46.50 அடியில் நீர் இருப்பு உள்ளது. குடிநீருக்காக சென்னைக்கு வினாடிக்கு 74 கனஅடி நீரும், பாசனத்துக்கு 92 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 684 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியை சார்ந்துள்ள பகுதிகளில் பரவலாக பருவமழை பெய்து வருவதால், தண்ணீர் தேவை குறைந்துள்ளது. எனவே தான் ஏரியில் பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்