குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் முதல் கட்ட லட்சார்ச்சனை விழா நிறைவு

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு முதல் கட்ட லட்சார்ச்சனை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது.

Update: 2019-10-26 22:30 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது.

சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

லட்சார்ச்சனை விழா

இந்த ஆண்டு குருபகவான் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் இந்த கோவிலில் குருப்பெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற உள்ளது. குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா முதல் கட்டமாக கடந்த 24-ந்தேதி தொடங்கி, இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது.

இதையடுத்து குருப்பெயர்ச்சிக்கு பின்னர் 2-வது கட்டமாக வருகிற 31-ந்தேதி லட்சார்ச்சனை விழா தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந்தேதியுடன் முடிவடையும். ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்