லஞ்ச ஒழிப்பு போலீஸ் எனக்கூறி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு: விசாரணைக்கு வந்த கார் டிரைவர் போலீஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து சாவு

லஞ்ச ஒழிப்பு போலீஸ் எனக்கூறி பணம் பறித்ததாக எழுந்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட கார் டிரைவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-10-26 23:15 GMT
வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கலீல் (43). இருவர் மீதும் வரப்பெற்ற ஒரு புகார் தொடர்பாக சத்துவாச்சாரி போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சுரேஷ் மற்றும் கலீல் ஆகியோர் நேற்று மதியம் 12 மணி அளவில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுரேஷ் மயங்கி கீழே விழுந்தார். அவரை போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் (பொறுப்பு) ஆகியோர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையம் சென்று இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

சுரேஷ், கலீல் ஆகிய இருவரும் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வாகன பயிற்சி பள்ளிக்கு சென்று நாங்கள் இருவரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் எனக்கூறி உள்ளனர். மேலும் அவர்கள் அங்கிருந்தவர்களிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டி பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வரப்பெற்ற புகார் குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சுரேஷ், கலீல் இருவரையும் போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து இருவரையும் பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதற்கிடையே போலீஸ் நிலையத்துக்கு வந்த சுரேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளார். அவர் அதிகாலையில் அளவுக்கு அதிகமாக புரோட்டா சாப்பிட்டுள்ளார். மேலும் அவர் உடல் நலக்குறைவாலும் அவதிப்பட்டு வந்ததாக கூறுகின்றனர். அதன் காரணமாக கீழே விழுந்து இறந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்