திருவண்ணாமலையில் ரூ.6½ கோடியில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமான பணிகள்

திருவண்ணாமலையில் ரூ.6½ கோடியில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுமான பணிகளை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். அப்போது பணிகள் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என தெரிவித்தார்.

Update: 2019-10-26 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே உள்ள திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் ரூ.6½ கோடியில் 50 படுக்கை வசதிகளுடன் ஒருங்கிணைந்த ‘ஆயுஷ்’ மருத்துவமனை கட்டும் பணி கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணியின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் ‘ஆயுஷ்’ மருத்துவமனையில் யுனானி, சித்தா உள்பட அனைத்து பிரிவுகளுக்கும் தனி வார்டு, மருத்துவர்கள் மற்றும் மருந்தகங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மேலும், பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் முதுகு தண்டுவடம் பாதித்தவர்களுக்கு குறுகிய காலம் தங்கும் மையம் அமைப்பதற்கான இடம் முதல் கட்டமாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்படும் படுக்கை புண்கள் இந்த மையம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்கான மையம் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக செயல்படுத்துவதற்கான முதல் கட்டமான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஷகீல்அகமது, இணை இயக்குனர் (நலப்பணிகள்) சுகுணா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) மீரா மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செங்கம் சாலை, அண்ணா நுழைவு வாயில் சந்திப்பு, நகராட்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சந்திப்பு, அபய மண்டபம் சந்திப்பு ஆகிய சந்திப்புகளை முன்னேற்றுவதற்கும், மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்