ஆம்புலன்ஸ் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு; தரம் பிரித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி ஆம்புலன்ஸ் வாகனங்களை தரம் பிரிப்பதற்காக அவற்றை நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்து தரம்பிரித்து ஸ்டிக்கர்கள் ஒட்டினார்கள்.

Update: 2019-10-25 22:30 GMT
புதுச்சேரி,

சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதல்படியும், புதுச்சேரி மாவட்ட கலெக்டர் கடந்த 10-ந்தேதி வெளியிட்டுள்ள உத்தரவின்படியும் புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தரம் பிரிக்கப்பட உள்ளன. அதன்படி அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசுசார்பு மருத்துவ நிறுவனம், தனியார் மருத்துவ நிறுவனங்களின் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பிரிவு-ஏ (தீவிர சிகிச்சை), பிரிவு-பி (அடிப்படை சிகிச்சை), பிரிவு-எச் (அமரர் ஊர்தி) என வகைப்படுத்தப்பட உள்ளது.

மேலும் அதன் இருப்பிட விவரங்கள் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவி மூலம் அறியவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதுவை பகுதிக்குட்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்வதற்காக மேட்டுப்பாளையம் சரக்கு வாகன முனையத்தில் உள்ள போக்குவரத்து துறையின் கிளை அலுவலகத்தில் போக்குவரத்து துறை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ஒரு முகாமினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த முகாம் நேற்று நடந்தது. முகாமை போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் தொடங்கிவைத்தார். வட்டார போக்குவரத்து அதிகாரி சீத்தாராமராஜு தலைமையில் போக்குவரத்து மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளான டாக்டர்கள் ரமேஷ், சீனிவாசன், பாஸ்கர், ஸ்ரீவத்சவா ஆகியோர் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது வாகனங்களில் உயிர்காப்பு வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி வாகனங்களை தரம் பிரித்து பிரிவு-ஏ, பிரிவு-பி, பிரிவு-எச் என தரம் பிரித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

இந்த ஆய்வின்போது வருகிற 15-ந்தேதிக்குள் அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் வாகன இருப்பிட கண்காணிப்பு கருவியை பொருத்தவேண்டும் என்று அதிகாரிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களின் டிரைவர்களிடம் அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்