அதிகமான பரப்பளவை காட்டி முறைகேடாக பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை - கலெக்டர் தகவல்

மாவட்டத்தில் முறைகேடாக பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.

Update: 2019-10-25 22:45 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது. விவசாய இணை இயக்குனர் சொர்ணலிங்கம், நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து பேசியதாவது:-

பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2016-17-ம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 846 விவசாயிகளுக்கு ரூ.529.06 கோடி மதிப்பிலும், 2017-18-ம் ஆண்டில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 369 விவசாயிகளுக்கு ரூ.469.99 கோடி மதிப்பிலும் இழப்பீட்டு தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல 2018-19-ம் ஆண்டில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 984 விவசாயிகள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 67 எக்டேர் பரப்பளவில் பல்வேறு வகையான பயிர்களை காப்பீடு செய்துள்ளனர். இந்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்கிட ஏதுவாக முதற்கட்டமாக 121 வருவாய் கிராமங்களுக்கு ரூ.175 கோடி நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ரூ.100 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தினை செயல்படுத்த ஓரியண்டல் இன்ஸ்யூரன்சு நிறுவனத்திற்கு அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம். திருவாடானை யூனியன் அஞ்சுகோட்டை கிராமத்தில் 100 ஏக்கர் அளவில் விவசாய பரப்பு இருக்கும் நிலையில் 400 ஏக்கர் பரப்பளவிற்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் பல பகுதிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான பரப்பளவிற்கு பயிர்காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

இதன் அடிப்படையில் விதிகளை மீறி அதிக பரப்பளவிற்கு பதிவு செய்து வழங்கிய கிராம நிர்வாக அதிகாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காப்பீடு நிறுவனம் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீதும் போலீசில் புகார் அளிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,350 பேரின் காப்பீடு குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்