கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம்-ஆர்ப்பாட்டம் - சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதி

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் அவதி அடைந்தனர்.

Update: 2019-10-25 23:00 GMT
திருச்சி,

தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசு டாக்டர்களின் பணியிடங்களை நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 150 டாக்டர்களும், திருச்சி மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம், மணப்பாறை உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 350 டாக்டர்களும் என மொத்தம் 500 டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் அவசர சிகிச்சைகளை மட்டும் மேற்கொண்டனர். மற்ற சிகிச்சைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதனால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் திருச்சி மாவட்டத்திலும் பொதுமக்கள் பலர் காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு முற்றிலும் முடங்கியதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தா.பேட்டை, மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக் டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்