சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தச்சுத்தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை; ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தச்சுத்தொழிலாளிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-10-25 23:15 GMT
ஊட்டி,

சிவகங்கை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சேது ரகுபதி(வயது 38). தச்சுத்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டிக்கு வந்து தங்கி அந்தப்பகுதியில் வேலை செய்து வந்தார். அப்போது ஊட்டி எல்க்ஹில் பகுதியில் கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் சேது ரகுபதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த பெண்ணுக்கு 13 வயது மதிக்கத்தக்க சிறுமி உள்ளாள்.

இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை சேது ரகுபதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அழுதபடி அக்கம்பக்கத்தினரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினாள். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேது ரகுபதியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் போலீசார் இதுதொடர்பாக ஊட்டி மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இதற்கிடையே நேற்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, சேது ரகுபதிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதி கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜரானார்.

மேலும் செய்திகள்