கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் ரூ.45 ஆயிரம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் இருந்து ரூ.45 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-25 23:45 GMT
கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் மோகன்பாபு (வயது 49). இவர் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதற்காக அவர் பொள்ளாச்சியில் இருந்து தனது சொந்த வாகனத்தில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துவிட்டு, அங்கு தனது காரை நிறுத்திவிட்டு, அரசு வாகனத்தில் பெரியநாயக்கன்பாளையத்துக்கு செல்வது வழக்கம்.

இவர் பலரிடம் லஞ்சம் வாங்குவதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் மற்றும் போலீசார் அவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோகன்பாபு வீட்டிற்கு செல்வதற்காக அரசு வாகனத்தில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தார்.

பின்னர் அவர் அரசு வாகனத்தில் இருந்து இறங்கி அங்கு நிறுத்தி இருந்த தனது சொந்த காருக்கு செல்ல முயன்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மோகன்பாபு, தனது கையில் இருந்த பணத்தை எடுத்து அரசு வாகனத்தில் உள்ள இருக்கைக்கு பின்புறம் மறைத்து வைத்தார். அதைப்பார்த்த போலீசார், அவரை பிடித்ததுடன், அவர் வந்த அரசு வாகனத்தில் அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது ஒரு இருக்கைக்கு பின்புறம் ரூ.45 ஆயிரம் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அந்த பணம் குறித்து மோகன்பாபுவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அது ஒப்பந்ததாரர் மற்றும் சிலரிடம் வாங்கிய லஞ்சப்பணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோகன்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:- வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றும் மோகன்பாபு, கட்டிட அனுமதி வழங்கியது உள்ளிட்ட சில பணிகளுக்கு கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் ஒரு ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் இருந்து லஞ்சமாக ரூ.45 ஆயிரத்தை வாங்கி உள்ளார். அந்த பணத்தை தனது வீட்டிற்கு கொண்டு செல்லும்போதுதான் பிடிபட்டு உள்ளார்.

அவர் தினமும் இதுபோன்று லஞ்சமாக பணத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்வதும் தெரியவந்து உள்ளது. எனவே அவர் இதுவரை எவ்வளவு பணம் லஞ்சமாக வாங்கி உள்ளார்? அந்த பணத்தை எங்கு மறைத்து வைத்துள்ளார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்