கோலார் தங்கவயல் நகரசபை தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் தலைவரின் மகள்
கோலார் தங்கவயல் நகரசபை தேர்தலில் முன்னாள் நகரசபை தலைவரின் மகள் சுயேச்சையாக களமிறங்குகிறார்.
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் நகரசபை தேர்தலில் முன்னாள் நகரசபை தலைவரின் மகள் சுயேச்சையாக களமிறங்குகிறார். இதற்காக அவர் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
உள்ளாட்சி தேர்தல்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் நகரசபைக்கு அடுத்த மாதம்(நவம்பர்) 12-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால் நேற்று முன்தினம் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று கோலார் தங்கவயல் நகரசபை முன்னாள் தலைவர் தயானந்தனின் மகளான நவ்யாஸ்ரீ 29-வது வார்டில்(கணேஷ்புரம்) சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பிறகு வேறு யாரும் நேற்று வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவில்லை.
இதற்கிடையே நேற்று கோலார் தங்கவயலில் பா.ஜனதா மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கட்முனிசாமி முன்னிலையில் பா.ஜனதா சார்பில் தேர்தலில் போட்டியிட பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அப்போது அங்கு வந்த கோலார் தங்கவயல் நகரசபை முன்னாள் தலைவர் கே.சி.முரளி 27-வது வார்டில் பா.ஜனதா சார்பில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இது அங்கிருந்தவர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
சுயேச்சையாக...
ஏனெனில் கே.சி.முரளி இதற்கு முன்பு பல்வேறு கட்சிகளில் அங்கம் வகித்த தாகவும், அதன்பிறகு அவர் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அவர் பா.ஜனதா சார்பில் போட்டியிட வேண்டி விருப்ப மனு தாக்கல் செய்திருப்பது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவருடைய விருப்ப மனுவை பெற்றுக்கொண்ட பா.ஜனதா மாவட்ட தலைவர் வெங்கட்முனிசாமி இதுபற்றி கட்சி மேலிடத்திடம் பேசி முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.