நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை

நடிகர்களின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-10-25 23:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கான வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

பா.மா.ெவங்கடாசலபதி:- பெருந்துறை அருகே உள்ள பாண்டியம்பாளையம் பகுதியில் பாறைகள் வெடி வைத்து உடைக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. அதிக அளவில் லாரிகளில் கல் ஏற்றிச்செல்லப்படுவதால் கீழ்பவானி வாய்க்கால் கரையில் சேதம் ஏற்பட்டு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செ.நல்லசாமி:- கீழ்பவானி பாசன தந்தையும், சுதந்திர போராட்ட வீரருமான எம்.ஏ.ஈஸ்வரனுக்கு கீழ்பவானி அணை வளாகத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும். நடிகர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பால் உற்பத்தியாளர்களை இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. எனவே அரசு இதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

கடந்த ஆண்டு மழையின்போது 16 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. தற்போதும் பவானி, காவிரி ஆறுகளில் தண்ணீர் வீணாக ெசன்று கொண்டு இருக்கிறது. எனவே மழைநீர் வீணாவதை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட ேவண்டும்.

கே.ஆர்.சுதந்திரராசு:- கீழ்பவானி கால்வாயில், ஊஞ்சலூர் கிளை வாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனத்திலும், சென்னசமுத்திரம் வாய்க்காலில் இரட்டைப்படை பாசனத்திலும் பல இடங்களில் கால்வாய்கள் சேதம் அடைந்துள்ளது. புஞ்சை பாசனத்துக்கு நீர் திறப்பதற்கு முன்னர் இதை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் உதவியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

கரும்புக்கான கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமாக அறிவிக்க வேண்டும். மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

சுபி.தளபதி:- கோபி, டி.என்.பாளையம் பகுதிகளில் குறிப்பிட்ட நபர்களே, தடுப்பணை உட்பட அனைத்து பணிகளையும் ஏலம் எடுத்து, வேறு நபர்களிடம் உள் ஏலம் விடுகின்றனர். இதனால் தரமற்ற கட்டுமானம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வி.எம்.வேலாயுதம்:- காலிங்கராயன் பாசன வாய்க்காலில், காலிங்கராயன்பாளையம் அணைக்கட்டு முதல் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டும் சிமெண்ட் லைனிங் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளில் அதிக அளவில் கழிவுகள் கலக்கிறது. அங்கும் சிமெண்ட் லைனிங் அமைக்க வேண்டும்.

வி.பி.குணசேகரன்:- மலைப்பகுதியில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதால் வன விலங்குகள் பாதிக்கப்படுகிறது. எனவே அனுமதி பெற்றால் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

முனுசாமி:- சக்தி சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கி, 114 நாட்கள் ஆகியும், பணம் தரவில்லை. கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி, அவ்வாறு தாமதமானால், வட்டியுடன் அந்த தொகையை வழங்க வேண்டும் என விதிகள் உள்ளன. எனவே வட்டியுடன் அந்த தொகையை விவசாயிகளுக்கு பெற்றுக்ெகாடுக்க வேண்டும். வங்கியில் நாங்கள் வாங்கிய கடனுக்கான தொகையை, ஆலை நிர்வாகம் எங்களிடம் பிடித்து கொண்டு, அந்த தொகையை வங்கிக்கு திரும்ப செலுத்தவில்லை. இது மோசடி ஆகும். இதனால் நாங்கள் வங்கியில் வேறுகடன் பெற முடியவில்லை. எனவே ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நந்திவர்மன்:- இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு தேவையான உரம், இடுபொருட்களை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார் கள்.

அதற்கு விளக்கம் அளித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அரசு அதிகாரிகள் பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா மற்றும் அரசு அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்