மாவட்டம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் வேலை நிறுத்தம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-25 23:00 GMT
செய்யாறு,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள், மனித சங்கிலி, ஊர்வலம், தர்ணா, தொடர் உண்ணாவிரதம் என பல வகையில் போராட்டங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வந்தது.

அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 25-ந் தேதி கூட்டமைப்பை சேர்ந்த அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து நேற்று அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் திருவண்ணாமலை மாவட்டத்திலும் நேற்று தொடங்கியது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகள், திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாமல் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவப்பிரிவு, காய்ச்சல் பிரிவு ஆகியவற்றில் மட்டும் பணியாற்றினர்.

இந்த போராட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபடாத டாக்டர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் உள்ள 80 சதவீதம் டாக்டர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். நேற்று வழக்கம் போல் காலை 8 மணி முதல் புறநோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக வந்து காத்திருந்தனர். டாக்டர் வேலைநிறுத்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த நோயாளிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

11 மணியளவில் மருத்துவமனை வளாகத்தினுள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர் பாலாஜி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்