2-வது மனைவி புகாரின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்ட விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை

2-வது மனைவி அளித்த புகாரின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்ட விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-10-24 22:30 GMT
மூலக்குளம், -

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் செல்லபாப்பு நகரை சேர்ந்தவர் இமானுவேல் கில்பர்ட் (வயது 49), மரைன் என்ஜினீயர்; அவருடைய மனைவி எஸ்தர் மற்றும் 2 குழந்தைகளுடன் துபாயில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்தர், குழந்தைகளுடன் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து தங்கினார். இதற்கிடையே இமானுவேல் கில்பர்ட் துபாயில் இருந்தபோது அங்கு சென்னை அயனாவரத்தை சேர்ந்த கவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து அவர், கவியை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் இமானுவேல் கில்பர்ட், 2-வது மனைவி கவியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் கவி அளித்த புகாரின்பேரில் இமானுவேல் கில்பர்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த ஜூலை மாத இறுதியில் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகி சென்னை வில்லிவாக்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

சம்பவத்தன்று இமானுவேல் ரெட்டியார்பாளையம் செல்லபாப்பு நகரில் உள்ள தனது வீட்டில் தாயார் பிரிஜிட் உடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் வெல்டிங் சிலிண்டரை வாங்கி வந்து அதை தனது காரில் வைத்து வெல்டிங் சிலிண்டரில் உள்ள கியாசை திறந்துவிட்டார். இதில் மூச்சுத்திணறி இறந்தார்.

இதுகுறித்து அவருடைய தாயார் பிரிஜிட் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இமானுவேல் 2-வது மனைவி அளித்த புகாரின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்ட விரக்தியில் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் செய்திகள்