மின்வாரிய ஓய்வூதியர், சத்துணவு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஓய்வூதியர், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-10-24 22:30 GMT
சிவகங்கை, 

எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் சத்துணவு ஊழியர்களின் 35 ஆண்டுகால வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம், உணவூட்டு செலவினம் உயர்வு, சத்துணவு மையம் இணைப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வலியுறுத்தப்பட்டது.

மேலும் நவம்பர் மாதம் 10-ந் தேதி மாவட்ட தலைநகரில் நடைபெற இருக்கும் ஊர்வலம், நவம்பர் மாதம் 26-ந் தேதி நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலாராணி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கையில் மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். மின்வாரிய வைரவிழாவிற்கு மின் ஊழியர்களுக்கு 3 சதவீதம் ஊக்க தொகை வழங்கியது போன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றியவர்களுக்கு பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்.

மின்வாரியத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செல்வராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் உமாநாத், மாவட்ட செயலாளர் கருணாநிதி, பொருளாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்