ஆந்திராவில் பலத்த மழை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு

ஆந்திராவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-10-24 22:30 GMT
ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்ந 4 ஏரிகளில் 11.05 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். கோடை வெயில் காரணமாக இந்த 4 ஏரிகள் வறண்டன. இதனால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கல் குவாரிகள், விவசாய கிணறுகள், வேலூர் மாவட்டத்தில் இருந்து ரெயில்களில் தண்ணீர் கொண்டு வந்து சென்னையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி ஆகியோர் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன்ரெட்டியை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்று கடந்த மாதம் 25-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் முதலில் 100 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதிகப்பட்சமாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்டது. பின்னர் வினாடிக்கு 1,300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீீர் வரத்தால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் கடந்த 6-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 11-ந்தேதி புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இத்தனை நாட்களாக சராசரியாக வினாடிக்கு 600 கனஅடியாக கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் கிருஷ்ணா நதி கால்வாயில் நீர் வரத்து அதிகமானது. நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி தமிழக எல்லை ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வினாடிக்கு 786 கனஅடி தண்ணீீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 728 கனஅடியாக இருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28.25 அடியாக பதிவானது. 1,367 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 415 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 23 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த மாதம் 28-ந் தேதியிலிருந்து நேற்று மதியம் 12 மணி வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.530 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்