குண்டலுபேட்டையில் தொடர் அட்டகாசம்: 2 பேரை தாக்கிய காட்டு யானை பிடிபட்டது ‘கும்கி’கள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை

குண்டலுபேட்டையில் 2 பேரை தாக்கி தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த காட்டு யானையை வனத்துறையினர் ‘கும்கி’கள் உதவியுடன் பிடித்தனர்.

Update: 2019-10-24 22:15 GMT
கொள்ளேகால், 

குண்டலுபேட்டையில் 2 பேரை தாக்கி தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்த காட்டு யானையை வனத்துறையினர் ‘கும்கி’கள் உதவியுடன் பிடித்தனர்.

காட்டு யானை தொடர் அட்டகாசம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா அங்கலா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. அந்த யானை விளைநிலங்களில் புகுந்து பயிர்களை மிதித்தும், பிடுங்கி எறிந்தும் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த யானை 2 பேரையும் தாக்கி உள்ளது. இதில் அவர்கள் 2 பேரும் பலத்த காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனால் அந்த காட்டு யானையை பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் காட்டு யானையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். அந்த காட்டு யானை அங்கலா மட்டுமின்றி பக்கத்தில் உள்ள சிவப்புரா, சவுடள்ளி, வந்தேகாலா, கொடசோகே, தெரக்கனாம்பி ஆகிய பகுதிகளிலும் விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது.

4 கும்கி யானைகள் வருகை

ஒற்றை காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து சென்றதால், கும்கி யானைகள் உதவியுடன் அதனை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி மைசூரு மாவட்டம் நாகரஒலே வனப்பகுதியில் இருந்து அபிமன்யு, பார்த்தசாரதி, கணேசா, கோபாலசாமி ஆகிய 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அந்த கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் அங்கலா, சிவப்புரா, சவுடள்ளி, கொடசோகே உள்ளிட்ட கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினார்கள்.

ஆனால் ஒற்றை காட்டு யானை மட்டும் வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் இருந்து வந்தது. இதையடுத்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்துபவர்கள், கால்நடை மருத்துவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பிடிபட்டது

இந்த நிலையில் நேற்று அங்கலா பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டு இருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து கும்கி யானைகளுடன் வனத்துறையினர் அங்கலா பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒற்றை காட்டு யானையை, கும்கிகள் உதவியுடன் பிடிக்க முயன்றனர். ஆனால் காட்டு யானை முரண்டு பிடித்ததால் அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க மருந்தை யானை மீது செலுத்தினார்கள். இதனால் சிறிது நேரத்தில் அந்த யானை மயக்கியது.

அதன்பின்னர் வனத்துறையினர் காட்டு யானையின் கால்களில் கயிறு கட்டினார்கள். இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தனர். அதனைத்தொடர்ந்து மயக்கம் தெளிந்து எழுந்த காட்டு யானையை, வனத்துறையினர் லாரியில் ஏற்ற முயன்றனர். ஆனால் காட்டு யானை முரண்டு பிடித்ததால், அதனை கும்கிகள் உதவியுடன் வனத்துறையினர் லாரியில் ஏற்றினார்கள். பின்னர் அந்த காட்டு யானை அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.

கிராம மக்கள் மகிழ்ச்சி

அங்கலா, சிவப்புரா, சவுடள்ளி பகுதிகளில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டுள்ளதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்