எந்த தவறும் செய்யாததால் எனக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
நான் எந்த தவறும் செய்யாததால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்று முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நான் எந்த தவறும் செய்யாததால் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்று முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர்களுடன் சந்திப்பு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான டி.கே.சிவக்குமார் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் ஜாமீன் கோரிய அவரது மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையீடு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் அவர் சிறையில் இருந்து விடுதலையானார். நேற்று காலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு டி.கே.சிவக்குமார் சென்றார்.
அங்கு அவர், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். முன்னதாக டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்த தவறும் செய்யவில்லை
நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் தான் எனக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. நான் கஷ்டத்தை அனுபவித்த நாட்களில் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டு உள்ளேன். எனக்காக ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடி உள்ளனர். கடவுளிடமும் வேண்டி உள்ளனர். காங்கிரஸ் கட்சி தவிர பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் நான் சிறைக்கு சென்றதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களை பற்றி பேச விரும்பவில்லை.
எனக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல்களை சந்தித்து பேச உள்ளேன். அடுத்தகட்டமாக இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன். கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்திருக்கிறேன். அதன்பிறகு தான் பெங்களூருவுக்கு திரும்புவேன்.
ஆசை வார்த்தைகளை...
என் மீதான வழக்கில் தாய் மற்றும் மனைவி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை டெல்லி ஐகோர்ட்டு வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விசாரணைக்காக டெல்லிக்கு வர முடியாத காரணத்தால், பெங்களூருவில் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இதுவரை அமலாக்கத்துறை நடத்திய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராவேன்.
நான் கஷ்டத்தை அனுபவித்த நாட்களில் எனக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்திருப்பதன் மூலம் எனக்கு புதிய சக்தி கிடைத்துள்ளது. பா.ஜனதாவினர் யாருக்கெல்லாம், எந்த விதமான ஆசை வார்த்தைகளை கூறினார்கள் என்பது எனக்கு தெரியும். அதுபற்றி பெங்களூருவுக்கு வந்ததும் விளக்கமாக சொல்கிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.