தனியார் மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் நகல் எரிப்பு போராட்டம்

ரெயில்வேயை தனியார் மயமாக்குவதை கண்டித்து திண்டுக்கல்லில் ரெயில்வே ஊழியர்கள் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-10-23 23:00 GMT
திண்டுக்கல், 

நாடு முழுவதும் 50 ரெயில் நிலையங்கள், 150 விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ரெயில்வேயை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு வசதியாக 33 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கக் கூடாது. ரெயில்வே பணிமனைகளை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது.

மேலும் ரெயில்வே பணிகளுக்கு ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல், நிரந்தர ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று கருப்பு தினமாக கடைபிடித்தனர். மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தொழிற்சங்கத்தின் திண்டுக்கல் கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். சங்கத்தின் மதுரை கோட்ட உதவி செயலாளர் செந்தில்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் ஏராளமான ரெயில்வே ஊழியர்கள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.

அப்போது ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களை தனியாருக்கு கொடுப்பதற்கான உத்தரவு நகலை தீயிட்டு எரித்தனர். மேலும் ரெயில்வேயை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்த சம்பவம் காரணமாக ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் எஸ்.ஆர்.எம்.யூ. சங்கத்தின் பழனி கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழனி ரெயில்நிலையம் முன்பு நடந்த போராட்டத்துக்கு இதற்கு சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்களில் சிலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். பின்னர் ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், அதற்கான உத்தரவு நகலை தீயிட்டு எரித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும் செய்திகள்