தனியார் மயமாக்கலை கண்டித்து திருச்சி ரெயில்வே தொழிலாளர்கள் நகல் எரிப்பு போராட்டம்

தனியார் மயமாக்கலை கண்டித்து திருச்சி ரெயில்வே தொழிலாளர்கள் நகல் எரிப்பு போராட்டத்தை நடத்தினர்.

Update: 2019-10-23 23:00 GMT
பொன்மலைப்பட்டி,

இந்தியாவில் உள்ள 50 ரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்க நிதி அயோக் முதன்மை செயல் அதிகாரி அமிதாப்காந்த் தலைமையிலான கமிட்டி அமைத்து கடந்த 10-ந் தேதி உத்தரவு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியாரிடம் ரெயில்வேயை ஒப்படைக்கும் தீய நோக்கத்தில் 33 வருட சர்வீஸ் முடித்தவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அனைவரின் நிரந்தர வேலைவாய்ப்பை பறித்து ஒப்பந்த ஊழியர்களாக்கும் சதித்திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று அகில இந்திய கருப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

அதன்படி, திருச்சி பொன்மலை பணிமனை ஆர்மரிகேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க ரெயில்வே தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நகல் எரிப்பு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொதுச்செயலாளரும் பொன்மலை பணிமனை பொறுப்பாளருமான வீரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின்போது நிதி அயோக் கமிட்டியின் பரிந்துரை நகலை எரித்து கோஷம் எழுப்பப்பட்டது. இந்த போராட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க பொன்மலை பணிமனை கோட்ட அனைத்து கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் ரெயில்வே நிர்வாகத்தின் தனியார் மய போக்கினை கண்டிப்பதாகவும், இதனால், ரெயில்வே ஊழியர்கள் பலரை வீட்டுக்கு அனுப்பும் செயலை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று மாலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கோட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டத்தலைவர் வெங்கடேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் உதவி பொதுச்செயலாளர்கள் மாதவன், மனோகரன் மற்றும் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட ரெயில்களை தனியார் மயமாக்கும் நிதி அயோக் உத்தரவு நகலை எரிப்பதற்கும், கிழிப்பதற்கும் போலீசார் அனுமதி அளிக்காத காரணத்தால் டி.ஆர்.இ.யு. கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

மேலும் செய்திகள்