அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மேலும் 2 பேர் சாவு

புதுப்பேட்டை அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் மேலும் 2 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2019-10-23 23:15 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள வீரப்பெருமாநல்லூர் காலனியை சேர்ந்தவர் காசி மகன் சிவகண்டன்(வயது 22). காய்கறி வியாபாரி.

இவரது நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த சந்துரு(19), அஜித்(19). இவர்கள் இருவரும் உளுந்தூர்பேட்டையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும், ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் மாலை கெடிலம் மெயின்ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயமடைந்த சிவகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் படுகாயமடைந்த சந்துரு, அஜித் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதில் சந்துரு நிலைமை மேலும் மோசமானதால், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கட்டார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் முண்டியம்பாக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த அஜித்தும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தது மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இது கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்