முறையாக பராமரிக்காததால் அங்கன்வாடி அமைப்பாளர் பணியிடை நீக்கம் - அரூர் உதவி கலெக்டர் நடவடிக்கை

அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிக்காத அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து அரூர் உதவி கலெக்டர் பிரதாப் நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2019-10-23 22:30 GMT
அரூர்,

இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தாலுகாக்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் அரூர் உதவி கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அரூரை அடுத்த வேடகட்டமடுவு ஊராட்சி கருங்கல்பாடி அருகே உள்ள ஆலாம்பாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவி கலெக்டர் பிரதாப் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிக்காமல் குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கன்வாடி மையத்தை முறையாக பராமரிக்காத அமைப்பாளர் சகுந்தலாவை பணியிடை நீக்கம் செய்து உதவி கலெக்டர் பிரதாப் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மையங்களை சுத்தமாகவும், விதிமுறைகளின்படியும் பராமரிக்க வேண்டும்.

குழந்தைகள் அனைவருக்கும் வழங்க வேண்டிய உணவு வகைகள் அனைத்தையும் விதிமுறைப்படி வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் தினமும் குழந்தைகளுக்கு வழங்கும் உணவு பட்டியல் விவரங்களை கரும்பலகையில் பதிவு செய்ய வேண்டும். அவற்றை அங்கன்வாடி மையங்களில் எந்த நேரத்திலும் ஆஜரில் வைக்க பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதவி கலெக்டர் பிரதாப் அறிவுறுத்தினார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்