கித்தூர் ராணி சென்னம்மா சமாதி, தேசிய நினைவு சின்னமாக மாற்றப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கித்தூர் ராணி சென்னம்மா சமாதி, தேசிய நினைவு சின்னமாக மாற்றப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
பெங்களூரு,
கித்தூர் ராணி சென்னம்மா சமாதி, தேசிய நினைவு சின்னமாக மாற்றப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
வீரமரணம்
விடுதலை போராட்ட வீராங்கனை கித்தூர் ராணி சென்னம்மா ஜெயந்தி விழா பெங்களூரு ரவீந்திர கலாஷேத்ரா கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த கித்தூர் ராணி சென்னம்மா உருவப்படத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:-
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்தவர் கித்தூர் ராணி சென்னம்மா. இதனால் ஆண்டுதோறும் கித்தூர் ராணி சென்னம்மா ஜெயந்தி விழா நடத்தப்படுகிறது. இன்றைய பெண் குழந்தைகள் அனைவருக்கும் கித்தூர் ராணி சென்னம்மா ஒரு உந்துசக்தியாக திகழ்கிறார். இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் கர்நாடகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
முதல்-மந்திரி நிவாரண நிதி
அந்த பாதிப்புகளை சரிசெய்ய நாங்கள் முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறோம். அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும். கித்தூர் ராணி சென்னம்மா பிறந்த இடம் மற்றும் சமாதியை தேசிய நினைவு சின்னமாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
விழாவில் கூடலசங்க மகாபீட மடாதிபதி ஜெயபசவ மிருதுஞ்சய சுவாமி பேசுகையில், “ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் கித்தூர் ராணி சென்னம்மா. இந்த முறை அவரது ஜெயந்தியை விமரிசையாக கொண்டாடாமல், அரசு வழங்கிய நிதியில் ரூ.70 லட்சத்தை முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். பெலகாவி விமான நிலையத்திற்கு கித்தூர் ராணி சென்னம்மா பெயரையும், உப்பள்ளி விமான நிலையத்திற்கு பெலவடி மல்லம்மா பெயரையும் சூட்ட வேண்டும்“ என்றார்.