கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரெயில்களை இயக்க கோரி கையெழுத்து இயக்கம்

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு ரெயில்களை இயக்க கோரி அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

Update: 2019-10-23 22:00 GMT
கோவை,

கோவையில் இருந்து மதுரை, ராமேசுவரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 10-க்கும் மேலான ரெயில்கள் தினசரி இயக்கப்பட்டு வந்தது.

கோவை-திண்டுக்கல் அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த வழியாக தென் மாவட்டங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரெயில்கள் இயக்கப்படவில்லை.

கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மதுரை வழியாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு ரெயில்களை இயக்க கோரியும், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அனைத்து கட்சிகள் சார்பில் ரெயில் நிலையத்தின் முன் நேற்று காலை கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை எம்.பி. நடராஜன் தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறும்போது, கோவையில் உக்கடம், ஈச்சனாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக அதிக ரெயில்களை இயக்குவதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ரெயில்வே துறையை வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து ரெயில்களை இயக்க மறுத்தால் மறியல் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

இதில் சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திக், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், கோவை ஜெயராஜ், வணிகர் சங்கத்தை சேர்ந்த மாணிக்கம் உள்பட 100-க்கும் மேலான அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்