மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஜவுளிக்கடை உரிமையாளர் மீது வழக்கு
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக ஜவுளிக்கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பீளமேடு,
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன் (வயது 70). இவர் அந்தப்பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் 29-ந் தேதி கோவை நவஇந்தியா பகுதியில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் அத்திவரதர், கிருஷ்ணர் குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது.
அத்துடன் அவர் பேசியது முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
அத்துடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து மனு கொடுத்தனர். அதன்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பீளமேடு போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீசார் காரப்பன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், மத உணர்வை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை இழிவாக பேசுதல் ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
காரப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே காரப்பன் பேசுவதுபோன்று மற்றொரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அவர் நான் இந்து மதம் குறித்து தவறாக பேசிவிட்டேன், அது இந்துக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.