கோத்தகிரி அருகே, அளக்கரை சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி,வாலிபரை துரத்தியது

கோத்தகிரி அருகே அளக்கரை கிராமத்திற்கு செல்லும் சாலையில் 2 குட்டிகளுடன் உலா வந்த கரடி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-10-23 22:00 GMT
கோத்தகிரி, 

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காட்டெருமை, புலி, கரடி, சிறுத்தை புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து விடுவது வழக்கமாகி வருகிறது. இதனால் அடிக்கடி மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதில் வனவிலங்குகள் தாக்கி பொதுமக்கள் காயமடைவதும், உயிரிழப்பதும் நிகழ்கின்றன.

கோத்தகிரி அருகே உள்ள அளக்கரை, மூணு ரோடு, கீரக்கல், கேசலாடா உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 2 குட்டிகளுடன் கரடி ஓன்று உலா வருகிறது. இந்த கரடி தனது குட்டிகளுடன் தேயிலை தோட்டங்களிலும், சாலையிலும் தொடர்ந்து உலா வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டத்தில் பணி புரிந்து வரும் தொழிலாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அரவேனுவிலிருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி வளாகததில் இருந்து வெளியே வந்த அந்த கரடி தனது குட்டிகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தது. கரடிகளை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தினர். ஆனால் கரடி எவ்வித அச்சமும் இன்றி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தது.

இந்த கரடி குறித்து அறியாத வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வேகமாக சென்றார். மோட்டார் சைக்கிளை கண்ட கரடி குட்டிகள் பயந்து சாலையோரம் இருந்த புதருக்குள் ஓடின. இதையடுத்து கோபமடைந்த கரடி அந்த வாலிபரை துரத்தியது. கரடியை கண்டதும் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டினார். இருப்பினும் கரடி அந்த வாலிபரை சிறிது தூரம் துரத்தி சென்றது. அதற்குள் வாலிபர் மின்னல் வேகத்தில் சென்று விட்டார். இதையடுத்து அந்த கரடி தனது குட்டிகளுடன் காட்டிற்குள் சென்று மறைந்தது. இந்த காட்சியை அந்த வழியாக காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சாலையில் குட்டிகளுடன் சுற்றித்திரியும் கரடிகளால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்