தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.39 ஆயிரம்-செல்போன் பறிப்பு - 2 பேர் கைது

வேதாரண்யத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.39 ஆயிரம்- செல்போனை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-10-22 22:45 GMT
வேதாரண்யம்,

வேதாரண்யம் வடமழை மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மகன் சதீ‌‌ஷ்குமார்(வயது30). இவர் வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள்களை கடனுக்கு கொடுத்து கடனை வசூல் செய்யும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கடன் தொகையை வசூல் செய்துகொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வேதாரண்யத்தில் உள்ள அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நெய்விளக்கு மெயின் ரோட்டில் வந்த போது நெய்விளக்கை சேர்ந்த கணேசன் மகன் சத்தியசீலன் (23), வேதரத்தினம் மகன் புருஷோத்தவராஜ் (26) ஆகிய இருவரும், மோட்டார் சைக்கிளில் வந்த சதீ‌‌ஷ்குமாரை வழிமறித்து தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.39 ஆயிரத்தையும், செல்போனையும் பறித்துகொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து சதீ‌‌ஷ்குமார் வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம், செல்போனை பறித்து சென்ற சத்தியசீலன், புருஷோத்தவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்