தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்றைக்கு விசாரணை ஒத்திவைப்பு
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
பெங்களூரு,
தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு மீதான விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
ஆட்சேபனை
கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 17 பேரை தகுதி நீக்கம் செய்து முன்னாள் சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்த தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து 17 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் மனு ஒரு மாதத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் 26-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் ஆட்சேபனை தாக்கல் செய்யும்படி காங்கிரசுக்கு உத்தரவிட்டது. அடுத்த விசாரணை 22-ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.
திட்டமிட்டப்படி விசாரணை
இந்த நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் வக்கீல் கபில்சிபல் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி, ஆட்சேபனை தாக்கல் செய்ய ஒரு வாரம் காலஅவகாசம் வழங்குமாறு கேட்டார். ஆனால் ஒரு நாள் மட்டும் கால அவகாசம் வழங்கி, வழக்கின் விசாரணையை 23-ந் தேதிக்கு (இன்று) சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
ஆனால் அன்றைய தினம் மாலையில் தேர்தல் ஆணைய வக்கீல் ஆஜராகி, 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், விசாரணையை திட்டமிட்டப்படி 22-ந் தேதியே (நேற்று) நடத்துமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்று ஏற்கனவே திட்டமிட்டப்படி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தது.
ஒத்திவைப்பு
அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு நேற்று நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் இருக்கும்போது, காங்கிரஸ் எப்படி ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்யலாம் என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆட்சேபனை தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்குமாறு காங்கிரஸ் சார்பில் ஆஜரான வக்கீல் கேட்டுக் கொண்டார். இதை ஏற்று விசாரணையை இன்றைக்கு (புதன்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.