டெங்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 1,156 பணியாளர்கள் நியமனம் - கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள 1,156 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில்,
டெங்கு காய்ச்சல் ஒருவகை வைரஸ் நோயாகும். இந்தநோய் பகலில் கடிக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. ஏடிஸ் கொசு உருவாகும் இடங்களை அழித்து வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்கமுடியும்.
பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றிலும் உள்ள உபயோகமற்ற பொருட்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள் நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் மற்றும் திடக்கழிவுகளை அகற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக் கொண்டால் ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க முடியும்
தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பீளிச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்கவேண்டும். தங்கள் பகுதிக்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைக்கு வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசு மற்றும் 148 தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் தகவல் பெறப்பட்டு சம்மந்தப்பட்ட கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அளவிலான ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் நோயாளிகளுக்கான பரிசோதனைக்காக 24 `செல் கவுண்டர்' கருவிகள் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
கொசு ஒழிப்பு நடவடிக்கைக்காக ஊராட்சி ஒன்றியத்தில் 220 பணியாளர்களும், பேரூராட்சிகள் சார்பாக 585 பணியாளர்களும், நகராட்சிகளில் 43 பணியாளர்களும், மாநகராட்சியில் 298 தேசிய சுகாதார இயக்கம் சார்பாக 10 பணியாளர்களும் என மொத்தம் 1,156 பணியாளர்களை அமர்த்தி டெங்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதிலும் காய்ச்சல் கண்ட இடங்களில் கொசுப் புழு ஒழிப்பு நடவடிக்கைகளோடு புகை மருந்து அடிக்கும் பணியும் முனைப்போடு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 245 புகை மருந்து அடிக்கும் கருவிகள் இப்பணிக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. அப்பணிக்கு தேவையான மருந்துகளும் தேவையான அளவு இருப்பில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாடு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் சுத்திகரிப்பு பணிைய மேற்கொள்ளவேண்டும் எனவும், அடுத்த மாதம் சபரிமலை சீசன் தொடங்குவதை முன்னிட்டு சுற்றுலா தலங்களை முன்னிலைபடுத்தி 15 தினங்களுக்குள் மாவட்டம் முழுவதும் முழு சுத்திகரிப்பு பணிைய செய்து முடிக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா, சுகாதாரத்றை அதிகாரிகள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.