வடகர்நாடக பகுதி தண்ணீரில் தத்தளிக்கிறது கனமழைக்கு 12 பேர் பலி கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வடகர்நாடக பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்த கனமழைக்கு மாநிலத்தில் மொத்தம் 12 பேர் பலியாகி உள்ளனர்.

Update: 2019-10-22 23:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது. இந்த பருவமழையின்போது கடந்த ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வட கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் தத்தளிப்பு

வெள்ளத்திற்கு 90-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வீடு மற்றும் உறவுகள், உடைமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், வட கர்நாடகத்தை மழை மீண்டும் மிரட்ட தொடங்கியுள்ளது. வடகர்நாடகத்தில் உள்ள ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை, விஜயாப்புரா, யாதகிரி, கதக், தார்வார் உள்பட 12 மாவட்டங்களில் விடிய, விடிய கனமழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

நீர்வரத்து 2 லட்சம் கனஅடி

மேலும் மராட்டிய மாநிலத்தின் எல்லை பகுதியில் மழை அதிகமாக பெய்து வருவதால், அங்குள்ள கொய்னா அணை நிரம்பியுள்ளது. இதனால் அந்த அணையில் இருந்து அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அலமட்டி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடியாக உள்ளது.

அந்த அணையில் இருந்து அதே அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். கடந்த 2 மாதத்திற்கு முன்பு தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் செய்வதறியாது பரிதவித்து வருகிறார்கள். பெலகாவி மாவட்டத்தில் கோகாக் நகரில் வெள்ள நீர் புகுந்து பெரிய அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழைக்கு நேற்று முன்தினம் வரை 7 பேர் மரணம் அடைந்தனர்.

கால்நடைகளை காப்பாற்ற...

தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா கண்ணூர் கிராமத்தை சேர்ந்த சிவப்பா திப்பன்னவர் (வயது 65), வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இறந்தார். நேற்று முன்தினம் மல்லபிரபா ஆற்றில் அடித்து செல்லப்பட்ட, விவசாயி ராமப்பா மல்லப்பா பொன்னன்னவர் (50) உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல் கே.ஆர்.பேட்டை தாலுகா கஞ்சிகெரே கிராமத்தை சேர்ந்த குமார் (35) என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணம் அடைந்தார். பெலகாவி தாலுகாவில், தனது கால்நடைகளை காப்பாற்ற முயற்சி செய்த 16 வயது சிறுவன் ஒருவன் மழைநீரில் அடித்து செல்லப்பட்டான். அவனது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.

12 பேர் மரணம்

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகாவில் உள்ள ஏரியில், இளைஞர் ஒருவர் நீருக்குள் மூழ்கிவிட்டார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கதக் மாவட்டத்தை சேர்ந்த லகமாபுரா கிராம மக்கள் வெள்ளத்தில் சிக்கி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த கிராமத்தை விட்டு மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழைக்கு 5 பேர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகத்தில் கனமழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் 5 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மல்லபிரபா மற்றும் கட்டப்பிரபா அணைகள் நிரம்பி வழிகின்றன. அந்த அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கரையோரம் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கின்றன. மைசூரு, சாம்ராஜ்நகர், சிக்கமகளூரு, குடகு உள்ளிட்ட தென்கர்நாடக மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

விவசாய பயிர்கள் நாசம்

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகாவில் கனமழை பெய்ததால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. உத்தர கன்னடா மாவட்டத்தில் அங்கோலா தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாவணகெரே, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. சித்ரதுர்கா மாவட்டம் நீர்குந்தே பகுதியில் உள்ள குளம் உடைந்தது. இதனால் அந்த குளத்தில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகே உள்ள விவசாய நிலத்தில் புகுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.

தீபாவளி பொருட்கள் விற்பனை மந்தம்

கர்நாடகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முக்கியமாக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தீபாவளி பொருட்கள் விற்பனை மந்தமாகி உள்ளன. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்