பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி கொள்ளை வழக்கு: சுரேசுக்கு போலீஸ் காவல் மறுப்பு

திருச்சி அருகே பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி கொள்ளை வழக்கில் சுரேசுக்கு போலீஸ் காவல் அனுமதி மறுக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மீண்டும் மனு மீது விசாரணை நடைபெறுகிறது.

Update: 2019-10-22 23:00 GMT
திருச்சி, 

திருச்சி அருகே கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் கொள்ளை போனது. இது தொடர்பாக கொள்ளிடம் டோல்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டியை சேர்ந்த வெல்டரான ராதாகிரு‌‌ஷ்ணனை (வயது 28) தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்த வழக்கில் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் முருகன், அவரது உறவினரான சுரே‌‌ஷ், மதுரையை சேர்ந்த கணேசன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

திருவாரூர் முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்துள்ளான். லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சுரே‌‌ஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்தான். இவனை திருச்சி கோட்டை போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்து நேற்று முன்தினம் சுரேசை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பஞ்சாப் நே‌‌ஷனல் வங்கி கொள்ளை வழக்கில் சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி ஸ்ரீரங்கம் கோர்ட்டில் கொள்ளிடம் டோல்கேட் போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின் போது கொள்ளையன் சுரேசை திருச்சி மத்திய சிறையில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் ஸ்ரீரங்கம் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். நீதிபதி சிவகாம சுந்தரி முன்பு அவனை போலீசார் ஆஜர்படுத்தினர். சுரேசை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு சுரே‌‌ஷ் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார்.

நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீஸ் காவல் தற்போது தான் முடிந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக சுரே‌‌ஷ் தெரிவித்தான். இதையடுத்து சுரேசை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மனு மீதான விசாரணையை நாளைக்கு (அதாவது இன்று) நீதிபதி ஒத்திவைத்தார். இதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மீண்டும் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. பின்னர் சுரேசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கைதான மதுரையை சேர்ந்த கணேசனை கொள்ளிடம் டோல்கேட் போலீசார் கடந்த 18-ந் தேதி முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை நாளை (வியாழக்கிழமை) முடிவடைகிறது. கணேசனை போலீசார் நாளை ஸ்ரீரங்கம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்