ஓமன் கடலில் மாயமான தமிழக மீனவர்களை மீட்கக்கோரி வழக்கு: வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஓமன் நாட்டு கடலில் மாயமான தமிழக மீனவர்களை மீட்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது நம்புதாளை. இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கார்மேகம், ராமநாதன், காசிநாதன், காசிலிங்கம் ஆகிய 4 பேர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஒரு மீனவரும், வங்காளதேசத்தை சேர்ந்த பெயர் தெரியாத 3 மீனவர்கள் என மொத்தம் 8 பேர் ஒப்பந்த அடிப்படையில் ஓமன் நாட்டிற்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களாக சென்றனர். அவர்கள் அந்நாட்டில் தங்கி இருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி ஓமன் நாட்டிலுள்ள மஜ்ஜிதா தீவு பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் அவர்கள், ஒரு வாரம் கழித்துதான் கரை திரும்பி வருவார்கள். ஆனால் கடந்த மாதம் 28-ந்தேதி ஓமன் நாட்டின் கடற்கரை பகுதியில் ஹிக்கா என்ற புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கிய மீனவர்கள் கரை திரும்பவில்லை என தெரியவந்தது.
மேலும், மஜ்ஜிதா தீவு கரையில் 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எனவே ஓமன் நாட்டில் மீன்பிடிக்க சென்று புயலில் சிக்கிய மாயமான ராமநாதபுரம், குமரியை சேர்ந்த தமிழக மீனவர்கள் உள்பட 6 பேரை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், இதுதொடர்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை செயலாளர், வளைகுடா நாடுகள் வாழ் இந்தியர்கள் நல இணை செயலாளர், இந்தியாவுக்கான ஓமன் நாட்டு வெளியுறவு துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.