செஞ்சி அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

செஞ்சி அரசு மருத்துவ மனையில் திண்டிவனம் சப்-கலெக்டர் அனு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-10-21 22:30 GMT
செஞ்சி, 

செஞ்சியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்ட திண்டிவனம் சப்-கலெக்டர் அனு நேற்று செஞ்சி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் டாக்டர்களிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்ததோடு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் தரமாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்றும், குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். மேலும், அவர் தற்போது பருவ மழை தொடங்கியுள்ளதால் சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற ஏராளமானோர் மருத்துவமனைக்கு வருவார்கள். ஆகவே அதற்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இருப்பு வைத்துக் கொள்ளவேண்டும் என்று டாக்டர்களிடம் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற சப்-கலெக்டர் அனு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள கழிப்பறையை ஆய்வு செய்த சப்-கலெக்டர் அனு அதனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு ஆசிரியர்களை கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர், பள்ளி செல்லும் சாலையில் தேங்கி நின்ற கழிவுநீரை பேரூராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

முன்னதாக சப்-கலெக்டர் அனு செஞ்சி தாலுகா அலுவலகத்துக்கு சென்று அலுவலக பணியாளர்கள் வருகை பதிவேடு மற்றும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் கோவிந்தராஜன், துணை தாசில்தார்கள் தனலட்சுமி, கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், முதுநிலை உதவியாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி, பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரமே‌‌ஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்